Books / Periya Puranam

42. 6.6 சோமாசி மாற நாயனார் புராணம் (3630 - 3634)

6.6.1

சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர் குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில் செற்றவர்க்கு அன்பர் வந்தால்
பாதம் பணிந்தார் அமுது ஊட்டும் நல் பண்பின் மிக்கார்

6.6.1

6.6.2

யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம்
ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன
ஏழும் உவப்பப் புரிந்து இன்புறச் செய்த பேற்றால்
வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார்

6.6.2

6.6.3

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை
நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்

6.6.3

6.6.4

சீரும் திருவும் பொழியும் திருவாரூர் எய்தி
ஆரம் திகழ் மார்பின் அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால்
சாரும் பெரு நண்பு சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும் பதம் பற்றி உள்ளார்

6.6.4

6.6.5

துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார்

6.6.5

6.6.6

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
பணையும் தடமும் புடை சூழும் ஒற்றியூரில் பாகத்தோர்
துணையும் தாமும் பிரியாதார் தோழத்தம் பிரானாரை
இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில் மென்பணை தோள் எய்துவிக்க
அணையும் ஒருவர் சரணமே அரணமாக அடைந்தோமே

6.6.6

6.6 சோமாசி மாற நாயனார் புராணம் (3630 - 3634) — note

வம்பறா வரிவண்டு சருக்கம் முற்றிற்று.