102. 1.102 சீகாழி
1.102.1
உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.
1.102.1
1.102.2
மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே
ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே.
1.102.2
1.102.3
இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென்
றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே.
1.102.3
1.102.4
எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே.
1.102.4
1.102.5
மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக்
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.
1.102.5
1.102.6
குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை
அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே.
1.102.6
1.102.8
உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி
இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே.
1.102.8
1.102.9
ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே.
1.102.9
1.102.10
மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங்
கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா
நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே.
1.102.10
1.102.11
வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி
அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே.
1.102.11
1.102 — note
** இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.*