Books / Thirumurai 1

21. 1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்

1.21.1

புவம்வளி கனல்புனல் புவி()கலை
யுரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர்
திகழ்தரும் உயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு
பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிலை பெறுவரே. 01
(
) கலைபுரை என்றும் பாடம்.

1.21.1

1.21.2

மலைபல வளர்தரு புவியிடை
மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள்
நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர்
அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை
பவர்திரு மகளொடு திகழ்வரே.

1.21.2

1.21.3

பழுதில கடல்புடை தழுவிய
படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்
குலம்மலி தருமுயி ரவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு
முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர்
தொழுமவர் புகழ்மிகு முலகிலே.
(
) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம்.

1.21.3

1.21.4

நறைமலி தருமள றொடுமுகை
நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு
நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதமணை தரஅருள்
குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது
நினைபவர் செயமகள் தலைவரே.

1.21.4

1.21.5

சினமலி யறுபகை மிகுபொறி
சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு
தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை
தகுபர னுறைவது நகர்மதில்
கனமரு வியசிவ புரம்நினை
பவர்கலை மகள்தர நிகழ்வரே.

1.21.5

1.21.6

சுருதிகள் பலநல முதல்கலை
துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர
வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி
யடைவகை நினையர னுறைபதி
திருவளர் சிவபுரம் நினைபவர்
திகழ்குலன் நிலனிடை நிகழுமே.

1.21.6

1.21.7

கதமிகு கருவுரு வொடுவுகி
ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை
மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய
எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுரம்
நினைபவர் நிலவுவர் படியிலே.
(
) உகிரிடவட என்றும் படம்.

1.21.7

1.21.8

அசைவுறு தவமுயல் வினிலயன்
அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை
இருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு
விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுரம் நினைபவர்
செழுநில னினில்நிகழ் வுடையரே.

1.21.8

1.21.9

அடல்மலி படையரி அயனொடும்
அறிவரி யதொரழல் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர்
வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண
துடையுரு வெளிபடு மவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுரம்
நினைபவர் வழிபுவி திகழுமே.

1.21.9

1.21.10

குணமறி வுகள்நிலை யிலபொரு
ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி
மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர
னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை
பவரெழி லுருவுடை யவர்களே.

1.21.10

1.21.11

திகழ்சிவ புரநகர் மருவிய
சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை
நலமலி யொருபதும் நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு
நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின்
மிகைபுணர் தரநலம் மிகுவரே.

1.21.11

1.21 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.