34. 1.34 சீகாழி
1.34.1
அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே.
1.34.1
1.34.2
திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே.
1.34.2
1.34.3
இடியார் குரலே றுடையெந்தை
துடியா ரிடையா ளொடுதுன்னுங்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே.
1.34.3
1.34.4
ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழல்மங் கையொடன்பாய்
களியார் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண் டவரின்பே.
1.34.4
1.34.5
பனியார் மலரார் தருபாதன்
முனிதா னுமையோ டுமுயங்கி
கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதாம் அதுகண் டவரீடே.
1.34.5
1.34.6
கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையால் தொழுவார் தலையாரே.
1.34.6
1.34.7
திருவார் சிலையால் எயிலெய்து
உருவார் உமையோ டுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே.
1.34.7
1.34.8
அரக்கன் வலியொல் கஅடர்த்து
வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.
1.34.8
1.34.9
இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே.
1.34.9
1.34.10
சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோ டுடனன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.
1.34.10
1.34.11
நலமா கியஞான சம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வான் அடைவாரே.
1.34.11