Books / Thirumurai 2

38. 2.37 திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம்

2.37.1

சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.

2.37.1

2.37.2

சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித்த கருத்தே.

2.37.2

2.37.3

குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித்த லழகே.

2.37.3

2.37.4

படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே.

2.37.4

2.37.5

வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்
கானார் கடுவே டுவனான கருத்தே.

2.37.5

2.37.6

பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.

2.37.6

2.37.7

வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ்
சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல்
காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே.

2.37.7

2.37.8

கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே.

2.37.8

2.37.9

கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந்
தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்
வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே.

2.37.9

2.37.10

வேதம் பலவோமம் வியந்தடி போற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.

2.37.10

2.37.11

காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவான் அடைவாரே.

2.37.11