71. 2.70 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று
2.70.1
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே.
2.70.1
2.70.2
வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே.
2.70.2
2.70.3
புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி
நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.
2.70.3
2.70.4
வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.
2.70.4
2.70.5
தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே.
2.70.5
2.70.6
தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட
அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா லேந்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே.
2.70.6
2.70.7
சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கி
பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.
2.70.7
2.70.8
புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து
திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே.
2.70.8
2.70.9
சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப்
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.
2.70.9
2.70.10
செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய
கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக்
கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே.
2.70.10
2.70.11
கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே.
2.70.11
2.70.12
காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலை
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே.
2.70.12
2.70 — note
இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென் றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.