Books / Thirumurai 4

113. 4.113 தனி - திருவிருத்தம்

4.113.1

வெள்ளிக் குழைத்துணி போலுங்
கபாலத்தன் வீழ்ந்திலங்கு
வெள்ளிப் புரியன்ன வெண்புரி
நூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடன்ன வெண்பிறை
சூடிவெள் ளென்பணிந்து
வெள்ளிப் பொடிப்பவ ளப்புறம்
பூசிய வேதியனே.

4.113.1

4.113.2

உடலைத் துறந்துல கேழுங்
கடந்துல வாததுன்பக்
கடலைக் கடந்துய்யப் போயிட
லாகுங் கனகவண்ணப்
படலைச் சடைப்பர வைத்திரைக்
கங்கை பனிப்பிறைவெண்
சுடலைப் பொடிக்கட வுட்கடி
மைக்கண் துணிநெஞ்சமே.

4.113.2

4.113.3

முன்னே யுரைத்தால் முகமனே
யொக்குமிம் மூவுலகுக்
கன்னையும் அத்தனு மாவா
யழல்வணா நீயலையோ
உன்னை நினைந்தே கழியுமென்
னாவி கழிந்ததற்பின்
என்னை மறக்கப் பெறாயெம்
பிரானுன்னை வேண்டியதே.

4.113.3

4.113.4

நின்னையெப் போது நினையலொட்
டாய்நீ நினையப்புகிற்
பின்னையப் போதே மறப்பித்துப்
பேர்த்தொன்று நாடுவித்தி
உன்னையெப் போதும் மறந்திட்
டுனக்கினி தாயிருக்கும்
என்னையொப் பாருள ரோசொல்லு
வாழி இறையவனே.

4.113.4

4.113.5

முழுத்தழல் மேனித் தவளப்
பொடியன் கனகக்குன்றத்
தெழிற்பெருஞ் சோதியை எங்கள்
பிரானை யிகழ்ந்திர்கண்டீர்
தொழப்படுந் தேவர் தொழப்படு
வானைத் தொழுதபின்னை
தொழப்படுந் தேவர்தம் மால்தொழு
விக்குந்தன் தொண்டரையே.

4.113.5

4.113.6

விண்ணகத் தான்மிக்க வேதத்
துளான்விரி நீருடுத்த
மண்ணகத் தான்திரு மாலகத்
தான்மரு வற்கினிய
பண்ணகத் தான்பத்தர் சித்தத்
துளான்பழ நாயடியேன்
கண்ணகத் தான்மனத் தான்சென்னி
யானெங் கறைக்கண்டனே.

4.113.6

4.113.7

பெருங்கடல் மூடிப் பிரளயங்
கொண்டு பிரமனும்போய்
இருங்கடல் மூடி இறக்கும்
இறந்தான் களேபரமுங்
கருங்கடல் வண்ணன் களேபர
முங்கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை
நல்வீணை வாசிக்குமே.

4.113.7

4.113.8

வானந் துளங்கிலென் மண்கம்ப
மாகிலென் மால்வரையுந்
தானந் துளங்கித் தலைதடு
மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர்
வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக்
காட்பட்ட உத்தமர்க்கே.

4.113.8

4.113.9

சிவனெனும் நாமந் தனக்கே
யுடையசெம் மேனியெம்மான்
அவனெனை ஆட்கொண் டளித்திடு
மாகில் அவன்றனையான்
பவனெனு நாமம் பிடித்துத்
திரிந்துபன் னாளழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழி
யானென் றெதிர்ப்படுமே.

4.113.9

4.113.10

என்னையொப் பாருன்னை எங்ஙனம்
காண்பர் இகலியுன்னை
நின்னையொப் பார்நின்னைக் காணும்
படித்தன்று நின்பெருமை
பொன்னையொப் பாரித் தழலை
வளாவிச்செம் மானஞ்செற்று
மின்னையொப் பார மிளிருஞ்
சடைக்கற்றை வேதியனே.

4.113.10