Books / Thirumurai 5

23. 5.23 திருநின்றியூர் - திருக்குறுந்தொகை

5.23.1

கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.

5.23.1

5.23.2

  1. வீதி வேல்நெடுங் கண்ணியர் வெள்வளை
    நீதி யேகொளப் பாலது நின்றியூர்
    வேத மோதி விளங்குவெண் தோட்டராய்க்
    காதில் வெண்குழை வைத்தவெங் கள்வரே.

5.23.2

5.23.3

  1. புற்றி னார்அர வம்புலித் தோல்மிசைச்
    சுற்றி னார்சுண்ணப் போர்வைகொண் டார்சுடர்
    நெற்றிக் கண்ணுடை யாரமர் நின்றியூர்
    பற்றி னாரைப்பற் றாவினைப் பாவமே.

5.23.3

5.23.4

  1. பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
    மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
    நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
    உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே.

5.23.4

5.23.5

  1. சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
    இனைய னென்றென்று மேசுவ தென்கொலோ
    நினையுந் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
    பனையின் ஈருரி போர்த்த பரமரே.

5.23.5

5.23.6

  1. உரைப்பக் கேண்மின்நும் உச்சியு ளான்றனை
    நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
    உரைப்பொற் கற்றைய ராரிவ ரோவெனிற்
    திரைத்துப் பாடித் திரிதருஞ் செல்வரே.

5.23.6

5.23.7

  1. கன்றி யூர்முகில் போலுங் கருங்களி
    றின்றி ஏறல னாலிது வென்கொலோ
    நின்றி யூர்பதி யாக நிலாயவன்
    வென்றி யேறுடை எங்கள் விகிர்தனே.

5.23.7

5.23.8

  1. நிலையி லாவெள்ளை மாலையன் நீண்டதோர்
    கொலைவி லாலெயில் எய்த கொடியவன்
    நிலையி னார்வயல் சூழ்திரு நின்றியூர்
    உரையி னாற்றொழு வார்வினை ஓயுமே.

5.23.8

5.23.9

  1. அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
    நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
    இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக்
    குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

5.23.9

5.23.10

  1. எளிய னாமொழி யாஇலங் கைக்கிறை
    களியி னாற்கயி லாய மெடுத்தவன்
    நெளிய வூன்ற வலானமர் நின்றியூர்
    அளியி னாற்றொழு வார்வினை யல்குமே.

5.23.10