27. 5.27 திருவையாறு - திருக்குறுந்தொகை
5.27.1
சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்
பொந்து வார்புலால் வெண்டலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்
தந்தி வாயதோர் பாம்பர்ஐ யாறரே.
5.27.1
5.27.2
- பாக மாலை மகிழ்ந்தனர் பான்மதி
போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெய்அஞ் சாடும்ஐ யாறரே.
5.27.2
5.27.3
- நெஞ்ச மென்பதோர் நீள்கயந் தன்னுளே
வஞ்ச மென்பதோர் வான்சுழிப் பட்டுநான்
துஞ்சும் போழ்துநின் நாமத் திருவெழுத்
தஞ்சுந் தோன்ற அருளும்ஐ யாறரே.
5.27.3
5.27.4
- நினைக்கும் நெஞ்சினுள் ளார்நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி யூட்டினார்
பனைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
அனைத்து வாய்தலுள் ளாரும்ஐ யாறரே.
5.27.4
5.27.5
- பரியர் நுண்ணியர் பார்த்தற் கரியவர்
அரிய பாடலர் ஆடல ரன்றியுங்
கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கெலாம்
அரியர் தொண்டர்க் கெளியர்ஐ யாறரே.
5.27.5
5.27.6
- புலரும் போது மிலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போதும் இலாதது மன்றியும்
அலரும் போதும் அணியும்ஐ யாறரே.
5.27.6
5.27.7
- பங்க மாலைக் குழலியோர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமுங் கண்ணியும்
அங்க மாலையுஞ் சூடும்ஐ யாறரே.
5.27.7
5.27.8
- முன்னை யாறு முயன்றெழு வீரெலாம்
பின்னை யாறு பிரியெனும் பேதைகாள்
மன்னை யாறு மருவிய மாதவன்
தன்னை யாறு தொழத்தவ மாகுமே.
5.27.8
5.27.9
- ஆனை யாறென ஆடுகின் றான்முடி
வானை யாறு வளாயது காண்மினோ
நான்ஐ யாறுபுக் கேற்கவன் இன்னருள்
தேனை யாறு திறந்தாலே யொக்குமே.
5.27.9
5.27.10
- அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடி யாளஞ்ச அஞ்சலென்
றரக்கன் ஈரைந்து வாயும் அலறவே
அரக்கி னானடி யாலும்ஐ யாறனே.
5.27.10
5.27 — note
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகி.