Books / Thirumurai 5

34. 5.34 திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை

5.34.1

கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.

5.34.1

5.34.2

  1. இரவ னையிடு வெண்டலை யேந்தியைப்
    பரவ னைப்படை யார்மதில் மூன்றையும்
    நிரவ னைநிலை யானநெய்த் தானனைக்
    குரவ னைத்தொழு வார்கொடி வாணரே.

5.34.2

5.34.3

  1. ஆனி டையைந்தும் ஆடுவ ராரிருள்
    கானி டைநடம் ஆடுவர் காண்மினோ
    தேனி டைமலர் பாயுநெய்த் தானனை
    வானி டைத்தொழு வார்வலி வாணரே.

5.34.3

5.34.4

  1. விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
    கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
    உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
    தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே.

5.34.4

5.34.5

  1. முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
    சங்கி யாது சமுத்திர நஞ்சுண்டான்
    நங்கை யோடு நவின்றநெய்த் தானனைத்
    தங்கை யாற்றொழு வார்தலை வாணரே.

5.34.5

5.34.6

  1. சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
    நட்ட மாடுவர் நள்ளிருட் பேயொடே
    சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
    இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே.

5.34.6

5.34.7

  1. கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
    கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ
    தெள்ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை
    உள்ளத் தாற்றொழு வாரும்பர் வாணரே.

5.34.7

5.34.8

  1. உச்சி மேல்விளங் கும்மிள வெண்பிறை
    பற்றி யாடர வோடுஞ்ச டைப்பெய்தான்
    நெற்றி யாரழல் கண்டநெய்த் தானனைச்
    சுற்றி மெய்தொழு வார்சுடர் வாணரே.

5.34.8

5.34.9

  1. மாலொ டும்மறை யோதிய நான்முகன்
    காலொ டும்முடி காண்பரி தாயினான்
    சேலொ டுஞ்செருச் செய்யும்நெய்த் தானனை
    மாலொ டுந்தொழு வார்வினை வாடுமே.

5.34.9

5.34.10

  1. வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை
    நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார்
    புரிந்து கைந்நரம் போடிசை பாடலும்
    பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே.

5.34.10

5.34 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.