43. 5.43 திருநல்லம் - திருக்குறுந்தொகை
5.43.1
- கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்
நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே.
5.43.1
5.43.2
- பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.
5.43.2
5.43.3
- பிணிகொள் வார்குழற் பேதையர் காதலாற்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டில் அரனெறி யாவது
நணுகு நாதன் நகர்திரு நல்லமே.
5.43.3
5.43.4
- தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போதும் இராதிக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன் றானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்ல மடைவதே.
5.43.4
5.43.5
- உரைத ளர்ந்துட லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை யானிடம் நல்லமே
பரவு மின்பணி மின்பணி வாரொடே
விரவு மின்விர வாரை விடுமினே.
5.43.5
5.43.6
- அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாத னடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.
5.43.6
5.43.7
- மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு மின்புக லாகுமே.
5.43.7
5.43.8
- வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய சிவகதி சேரலாஞ்
சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை யானிடம் நல்லமே.
5.43.8
5.43.9
- கால மான கழிவதன் முன்னமே
ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே.
5.43.9
5.43.10
- மல்லை மல்கிய தோளரக் கன்வலி
ஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி
நல்ல நல்லம் எனும்பெயர் நாவினாற்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே.
5.43.10
5.43 — note
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.