Books / Thirumurai 5

45. 5.45 திருத்தோணிபுரம் - திருக்குறுந்தொகை

5.45.1

  1. மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
    நீதி தான்சொல நீயெனக் காரெனுஞ்
    சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
    தாதி யாவன்நா னென்னுமென் தையலே.

5.45.1

5.45.2

  1. நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
    மிக்க தையலை வெள்வளை கொள்வது
    தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்
    தக்க தன்று தமது பெருமைக்கே.

5.45.2

5.45.3

  1. கெண்டை போல்நய னத்திம வான்மகள்
    வண்டு வார்குழ லாளுட னாகவே
    துண்ட வான்பிறைத் தோணி புரவரைக்
    கண்டு காமுறு கின்றனள் கன்னியே.

5.45.3

5.45.4

  1. பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
    மேல ளாவது கண்டனள் விண்ணுறச்
    சோலை யார்தரு தோணி புரவர்க்குச்
    சால நல்லளா கின்றனள் தையலே.

5.45.4

5.45.5

  1. பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப்
    பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
    சுண்ண மாடிய தோணி புரத்துறை
    அண்ண லாருக்குச் சால அழகிதே.

5.45.5

5.45.6

  1. முல்லை வெண்ணகை மொய்குழ லாயுனக்
    கல்ல னாவ தறிந்திலை நீகனித்
    தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே
    நல்லை யாயிடு கின்றனை நங்கையே.

5.45.6

5.45.7

  1. ஒன்று தானறி யாருல கத்தவர்
    நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
    துன்று வார்பொழில் தோணி புரவர்தங்
    கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே.

5.45.7

5.45.8

  1. உறவு பேய்க்கணம் உண்பது வெண்டலை
    உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
    துறைக ளார்கடல் தோணி புரத்துறை
    இறைவ னார்க்கிவள் என்கண்டன் பாவதே.

5.45.8

5.45.9

  1. மாக யானை மருப்பேர் முலையினர்
    போக யானு மவள்புக்க தேபுகத்
    தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
    ஆக யானு மவர்க்கினி யாளதே.

5.45.9

5.45.10

  1. இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி
    கட்டம் பேசிய காரரக் கன்றனைத்
    துட்ட டக்கிய தோணி புரத்துறை
    அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே.

5.45.10

5.45 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - தோணியப்பர், தேவியார் - திருநிலைநாயகியம்மை.