Books / Thirumurai 5

79. 5.79 திருப்புள்ளிருக்குவேளூர் - திருக்குறுந்தொகை

5.79.1

வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே.

5.79.1

5.79.2

மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லிரேற் புள்ளிருக் குவேளூர்
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.

5.79.2

5.79.3

அரும றையனை ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப்
புரிவெண் ணூலனைப் புள்ளிருக் குவேளூர்
உருகி நைபவர் உள்ளங் குளிருமே.

5.79.3

5.79.4

தன்னு ருவை யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை மேனிவெண் ணீற்றனைப்
பொன்னு ருவனைப் புள்ளிருக் குவேளூர்
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.

5.79.4

5.79.5

செங்கண் மால்பிர மற்கு மறிவொணா
அங்கி யின்னுரு வாகி அழல்வதோர்
பொங்க ரவனைப் புள்ளிருக் குவேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே.

5.79.5

5.79.6

குற்ற மில்லியைக் கோலச் சிலையினாற்
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப் புள்ளிருக் குவேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

5.79.6

5.79.7

கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர்
பொய்யி லாவரன் புள்ளிருக் குவேளூர்
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.

5.79.7

5.79.8

உள்ளம் உள்கி உகந்து சிவனென்று
மெள்ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக் குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே.

5.79.8

5.79.10

அரக்க னார்தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக் குவேளூர்
விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே.

5.79.10

5.79 — note

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வைத்தியநாதர், தேவியார் - தையல்நாயகியம்மை.