88. 5.88 திருமருகல் - திருக்குறுந்தொகை
5.88.1
பெருக லாந்தவம் பேதைமை தீரலாந்
திருக லாகிய சிந்தை திருத்தலாம்
பருக லாம்பர மாயதோ ரானந்தம்
மருக லானடி வாழ்த்தி வணங்கவே.
5.88.1
5.88.2
பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய்
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர்
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்றிரு
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.
5.88.2
5.88.3
சினத்தி னால்வருஞ் செய்தொழி லாமவை
அனைத்தும் நீங்கிநின் றாதர வாய்மிக
மனத்தி னால்மரு கற்பெரு மான்றிறம்
நினைப்பி னார்க்கில்லை நீணில வாழ்க்கையே.
5.88.3
5.88.4
ஓது பைங்கிளிக் கொண்பால் அமுதூட்டிப்
பாது காத்துப் பலபல கற்பித்து
மாது தான்மரு கற்பெரு மானுக்குத்
தூது சொல்ல விடத்தான் தொடங்குமே.
5.88.4
5.88.5
இன்ன வாறென்ப துண்டறி யேனின்று
துன்னு கைவளை சோரக்கண் நீர்மல்கும்
மன்னு தென்மரு கற்பெரு மான்றிறம்
உன்னி யொண்கொடி உள்ள முருகுமே.
5.88.5
5.88.6
சங்கு சோரக் கலையுஞ் சரியவே
மங்கை தான்மரு கற்பெரு மான்வரும்
அங்க வீதி அருகணை யாநிற்கும்
நங்கை மீரிதற் கென்செய்கேன் நாளுமே.
5.88.6
5.88.7
காட்சி பெற்றில ளாகிலுங் காதலே
மீட்சி யொன்றறி யாது மிகுவதே
மாட்சி யார்மரு கற்பெரு மானுக்குத்
தாழ்ச்சி சாலவுண் டாகுமென் தையலே.
5.88.7
5.88.8
நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும்
ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்
மாட நீண்மரு கற்பெரு மான்வரிற்
கூடு நீயென்று கூட லிழைக்குமே.
5.88.8
5.88.9
கந்த வார்குழல் கட்டிலள் காரிகை
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக
வந்தி டாய்மரு கற்பெரு மானென்று
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே.
5.88.9
5.88.10
ஆதி மாமலை அன்றெடுத் தானிற்றுச்
சோதி யென்றலுந் தொல்லருள் செய்திடும்
ஆதி யான்மரு கற்பெரு மான்றிறம்
ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.
5.88.10
5.88 — note
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுவரர், தேவியார் - வண்டுவார்குழலம்மை.