Books / Thirumurai 5

99. 5.99 பாவநாசம் - திருக்குறுந்தொகை

5.99.1

பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.

5.99.1

5.99.2

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கு மீசனெ னாதவர்க் கில்லையே.

5.99.2

5.99.3

பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென்
இட்டு மட்டியு மீதொழில் பூணிலென்
எட்டு மொன்றும் இரண்டு மறியிலென்
இட்ட மீசனெ னாதவர்க் கில்லையே.

5.99.3

5.99.4

வேத மோதிலென் வேள்விகள் செய்கிலென்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்கமோ ராறும் உணரிலென்
ஈச னையுள்கு வார்க்கன்றி இல்லையே.

5.99.4

5.99.5

காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென்
ஏல ஈசனென் பார்க்கன்றி இல்லையே.

5.99.5

5.99.6

கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி இருந்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்டல் ஒழிந்துவா னோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே.

5.99.6

5.99.7

கூட வேடத்த ராகிக் குழுவிலென்
வாடி யூனை வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப்
பாட லாளர்க்கல் லாற்பயன் இல்லையே.

5.99.7

5.99.8

நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி யிருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி இல்லையே.

5.99.8

5.99.9

கோடித் தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.

5.99.9

5.99.10

மற்று நற்றவஞ் செய்து வருந்திலென்
பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக்
குற்ற நற்குரை யார்கழற் சேவடி
பற்றி லாதவர்க் குப்பயன் இல்லையே.

5.99.10