Books / Thirumurai 7

19. 7.19 திருநின்றியூர்

7.19.1

அற்றவ னாரடி யார்தமக்
காயிழை பங்கினராம்
பற்றவ னாரெம் பராபர
ரென்று பலர்விரும்பும்
கொற்றவ னார்குறு காதவர்
ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவ னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

7.19.1

7.19.2

வாசத்தி னார்மலர்க் கொன்றையுள்
ளார்வடி வார்ந்தநீறு
பூசத்தி னார்புக லிந்நகர்
போற்றுமெம் புண்ணியத்தார்
நேசத்தி னாலென்னை யாளுங்கொண்
டார்நெடு மாகடல்சூழ்
தேசத்தி னார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

7.19.2

7.19.3

அங்கையின் மூவிலை வேலர்
அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித்
தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையோர் பாகர் மகிழ்ந்த
இடம்வள மல்குபுனற்
செங்கயல் பாயும் வயல்பொலி
யுந்திரு நின்றியூரே.

7.19.3

7.19.4

ஆறுகந் தாரங்கம் நான்மறை
யாரெங்கு மாகியடல்
ஏறுகந் தாரிசை ஏழுகந்
தார்முடிக் கங்கைதன்னை
வேறுகந் தார்விரி நூலுகந்
தார்பரி சாந்தமதா
நீறுகந் தாருறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.

7.19.4

7.19.5

வஞ்சங்கொண் டார்மனஞ் சேரகில்
லார்நறு நெய்தயிர்பால்
அஞ்சுங்கொண் டாடிய வேட்கையி
னாரதி கைப்பதியே
தஞ்சங்கொண் டார்தமக் கென்றும்
இருக்கை சரணடைந்தார்
நெஞ்சங்கொண் டார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

7.19.5

7.19.6

ஆர்த்தவர் ஆடர வம்மரை
மேற்புலி ஈருரிவை
போர்த்தவர் ஆனையின் தோலுடல்
வெம்புலால் கையகலப்
பார்த்தவ ரின்னுயிர் பார்படைத்
தான்சிர மஞ்சிலொன்றைச்
சேர்த்தவ ருக்குறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.

7.19.6

7.19.7

தலையிடை யார்பலி சென்றகந்
தோறுந் திரிந்தசெல்வர்
மலையுடை யாளொரு பாகம்வைத்
தார்கல் துதைந்தநன்னீர்
அலையுடை யார்சடை எட்டுஞ்
சுழல அருநடஞ்செய்
நிலையுடை யாருறை யும்மிட
மாந்திரு நின்றியூரே.

7.19.7

7.19.8

எட்டுகந் தார்திசை ஏழுகந்
தார்எழுத் தாறுமன்பர்
இட்டுகந் தார்மலர்ப் பூசையிச்
சிக்கும் இறைவர்முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக்
காய்ந்து பலியிரந்தூண்
சிட்டுகந் தார்க்கிட மாவது
நந்திரு நின்றியூரே.

7.19.8

7.19.9

காலமும் ஞாயிறு மாகிநின்
றார்கழல் பேணவல்லார்
சீலமுஞ் செய்கையுங் கண்டுகப்
பாரடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன்
மந்திரத் தால்வணங்க
நீலநஞ் சுண்டவ ருக்கிட
மாந்திரு நின்றியூரே.

7.19.9

7.19.10

வாயார் மனத்தால் நினைக்கு
மவருக் கருந்தவத்தில்
தூயார் சுடுபொடி யாடிய
மேனியர் வானிலென்றும்
மேயார் விடையுகந் தேறிய
வித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க் கணியவர்
ஊர்திரு நின்றியூரே.

7.19.10

7.19.11

சேரும் புகழ்த்தொண்டர் செய்கை
அறாத்திரு நின்றியூரிற்
சீருஞ் சிவகதி யாயிருந்
தானைத் திருநாவலா
ரூரன் உரைத்த உறுதமிழ்
பத்தும்வல் லார்வினைபோய்ப்
பாரும் விசும்புந் தொழப்பர
மன்னடி கூடுவரே.

7.19.11

7.19 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மகாலட்சுமியீசுவரர், தேவியார் - உலகநாயகியம்மை.