Books / Thirumurai 7

88. 7.87 திருப்பனையூர்

7.87.1

மாடமாளிகை கோபுரத்தொடு
மண்டபம்வள ரும்வளர்பொழில்
பாடல் வண்டறையும்
பழனத் திருப்பனையூர்த்
தோடுபெய்தொரு காதினிற்குழை
தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்
றாடு மாறுவல்லார்
அவரே அழகியரே.

7.87.1

7.87.2

நாறுசெங்கழு நீர்மலர்
நல்லமல்லிகை சண்பகத்தொடு
சேறுசெய் கழனிப்
பழனத் திருப்பனையூர்
நீறுபூசிநெய் யாடிதன்னை
நினைப்பவர்தம் மனத்தனாகிநின்
றாறு சூடவல்லார்
அவரே அழகியரே.

7.87.2

7.87.3

செங்கண்மேதிகள் சேடெறிந்து
தடம்படிதலிற் சேலினத்தொடு
பைங்கண் வாளைகள்
பாய்பழனத் திருப்பனையூர்த்
திங்கள்சூடிய செல்வனாரடி
யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி
லங்கிருந் துறைவார்
அவரே அழகியரே.

7.87.3

7.87.4

வாளைபாய மலங்கிளங்கயல்
வரிவராலுக ளுங்கழனியுள்
பாளையொண் கமுகம்
புடைசூழ் திருப்பனையூர்த்
தோளுமாகமுந் தோன்றநட்டமிட்
டாடுவாரடித் தொண்டர்தங்களை
ஆளு மாறுவல்லார்
அவரே அழகியரே.

7.87.4

7.87.5

கொங்கையார்பல ருங்குடைந்
தாடநீர்க்குவ ளைமலர்தர
பங்கயம் மலரும்
பழனத் திருப்பனையூர்
மங்கைபாகமும் மாலோர்பாகமுந்
தாமுடையவர் மான்மழுவினோ
டங்கைத் தீயுகப்பார்
அவரே அழகியரே.

7.87.5

7.87.6

காவிரிபுடை சூழ்சோணாட்டவர்
தாம்பரவிய கருணையங்கடலப்
பாவிரி புலவர்
பயிலுந் திருப்பனையூர்
மாவிரிமட நோக்கிஅஞ்ச
மதகரியுரி போர்த்துகந்தவர்
ஆவில்ஐந் துகப்பார்
அவரே அழகியரே.

7.87.6

7.87.7

மரங்கள்மேல்மயி லாலமண்டப
மாடமாளிகை கோபுரத்தின்மேல்
திரங்கல்வன் முகவன்
புகப்பாய் திருப்பனையூர்த்
துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த்
தோன்றலுமறி யாமற்றோன்றிநின்
றரங்கில் ஆடவல்லார்
அவரே அழகியரே.

7.87.7

7.87.8

மண்ணெலாம்முழ வம்மதிர்தர
மாடமாளிகை கோபுரத்தின்மேற்
பண்ணி யாழ்முரலும்
பழனத் திருப்பனையூர்
வெண்ணிலாச் சடைமேவிய
விண்ணவரொடு மண்ணவர்தொழ
அண்ணலாகி நின்றார்
அவரே அழகியரே.

7.87.8

7.87.9

குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக்
குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப்
பரக்குந் தண்கழனிப்
பழனத் திருப்பனையூர்
இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை
தோளிருபது தாள்நெரிதர
அரக்கனை அடர்த்தார்
அவரே அழகியரே.

7.87.9

7.87.10

வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர்
மாதவர்வள ரும்வளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார்
பயிலுந் திருப்பனையூர்
வஞ்சியும்வளர் நாவலூரன்
வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பார்
அவரே அழகியரே.

7.87.10

7.87 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை.