Books / Thirumurai 5

38. 5.38 திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை

5.38.1

குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே.

5.38.1

5.38.2

  1. உன்னி வானவர் ஓதிய சிந்தையிற்
    கன்னல் தேன்கட வூரின் மயானத்தார்
    தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
    பின்னை என்னார் பெருமா னடிகளே.

5.38.2

5.38.3

  1. சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
    ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
    கால காலர் கடவூர் மயானத்தார்
    மாலை மார்பர் பெருமா னடிகளே.

5.38.3

5.38.4

  1. இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
    மறவ னார்கட வூரின் மயானத்தார்
    அறவ னாரடி யாரடி யார்தங்கள்
    பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே.

5.38.4

5.38.5

  1. கத்து காளி கதந்தணி வித்தவர்
    மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்
    ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
    பித்தர் காணும் பெருமா னடிகளே.

5.38.5

5.38.6

  1. எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்
    கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
    அரியர் அண்டத்து ளோரயன் மாலுக்கும்
    பெரியர் காணும் பெருமா னடிகளே.

5.38.6

5.38.7

  1. அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
    கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
    வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
    பிணங்கொள் காடர் பெருமா னடிகளே.

5.38.7

5.38.8

  1. அரவு கையினர் ஆதி புராணனார்
    மரவு சேர்கட வூரின் மயானத்தார்
    பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வார்
    பிரமன் மாற்கும் பெருமா னடிகளே.

5.38.8

5.38 — note

இப்பதிகத்தில் 9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.       5.38.9-10 இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழன்மின்னம்மை.