Books / Thirumurai 5

39. 5.39 திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை

5.39.1

  1. கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
    உள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்
    வள்ளல் மாமயி லாடு துறையுறை
    வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே.

5.39.1

5.39.2

  1. சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
    பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
    வைத்த மாமயி லாடு துறையரன்
    கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே.

5.39.2

5.39.3

  1. அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையுங்
    கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
    வண்டு சேர்மயி லாடு துறையரன்
    தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.

5.39.3

5.39.4

  1. வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
    அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
    மஞ்சன் மாமயி லாடு துறையுறை
    அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே.

5.39.4

5.39.5

  1. குறைவி லோங்கொடு மானிட வாழ்க்கையாற்
    கறைநி லாவிய கண்டனெண் டோ ளினன்
    மறைவ லான்மயி லாடு துறையுறை
    இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே.

5.39.5

5.39.6

  1. நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
    கலைக ளாயவல் லான்கயி லாயநன்
    மலையன் மாமயி லாடு துறையன்நம்
    தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.

5.39.6

5.39.7

  1. நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
    ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
    மாற்றி னான்மயி லாடு துறையென்று
    போற்று வார்க்குமுண் டோ புவி வாழ்க்கையே.

5.39.7

5.39.8

  1. கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமுந்
    தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
    நீல மாமயி லாடு துறையனே
    நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.

5.39.8

5.39.9

  1. பணங்கொ ளாடர வல்குற் பகீரதி
    மணங்கொ ளச்சடை வைத்த மறையவன்
    வணங்கு மாமயி லாடு துறையரன்
    அணங்கோர் பால்கொண்ட கோலம் அழகிதே.

5.39.9

5.39.10

  1. நீணி லாவர வச்சடை நேசனைப்
    பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
    வாணி லாமயி லாடு துறைதனைக்
    காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே.

5.39.10

5.39.11

  1. பருத்த தோளும் முடியும் பொடிபட
    இருத்தி னானவன் இன்னிசை கேட்டலும்
    வரத்தி னான்மயி லாடு துறைதொழுங்
    கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே.

5.39.11

5.39 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சொல்நாயகி.