Books / Thirumurai 5

40. 5.40 திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை

5.40.1

  1. வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்
    எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்
    கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
    அண்ண லேயறி வானிவள் தன்மையே.

5.40.1

5.40.2

  1. மருந்து வானவர் உய்யநஞ் சுண்டுகந்
    திருந்த வன்கழிப் பாலையுள் எம்பிரான்
    திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
    பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே.

5.40.2

5.40.3

  1. மழலை தான்வரச் சொற்றெரி கின்றிலள்
    குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
    அழக னேகழிப் பாலையெம் மண்ணலே
    இகழ்வ தோயெனை ஏன்றுகொ ளென்னுமே.

5.40.3

5.40.4

  1. செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை
    மைய லாகி மதிக்கில ளாரையுங்
    கைகொள் வெண்மழு வன்கழிப் பாலையெம்
    ஐய னேஅறி வானிவள் தன்மையே.

5.40.4

5.40.5

  1. கருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய
    ஒருத்த னையுமை யாளொரு பங்கனை
    அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்
    றொருத்தி யாருளம் ஊசல தாகுமே.

5.40.5

5.40.6

  1. கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
    நங்கை யையுட னேவைத்த நாதனார்
    திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான்
    இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே.

5.40.6

5.40.7

  1. ஐய னேஅழ கேஅன லேந்திய
    கைய னேகறை சேர்தரு கண்டனே
    மையு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
    ஐய னேவிதி யேஅரு ளென்னுமே.

5.40.7

5.40.8

  1. பத்தர் கட்கமு தாய பரத்தினை
    முத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை
    அத்த னைஅணி யார்கழிப் பாலையெஞ்
    சித்த னைச்சென்று சேருமா செப்புமே.

5.40.8

5.40.9

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

5.40.9

5.40.10

  1. பொன்செய் மாமுடி வாளரக் கன்றலை
    அஞ்சு நான்குமொன் றும்மிறுத் தானவன்
    என்செ யான்கழிப் பாலையு ளெம்பிரான்
    துஞ்சும் போதுந் துணையென லாகுமே.

5.40.10

5.40 — note

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பால்வண்ண நாதர், தேவியார் - வேதநாயகியம்மை.