41. 5.41 திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை
5.41.1
- உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
சடையிற் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க் கில்லை அவலமே.
5.41.1
5.41.2
- மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே.
5.41.2
5.41.3
- விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருட் காட்டகத் தாடலான்
பழுதொன் றின்றிப்பைஞ் ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே.
5.41.3
5.41.4
- ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே
நின்ற சூழ லறிவரி யானிடஞ்
சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள்
என்றும் மேவி யிருந்த அடிகளே.
5.41.4
5.41.5
- வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே.
5.41.5
5.41.6
- குண்டு பட்டுக் குறியறி யாச்சமண்
மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
அண்ட வாணன் அடியடைந் துய்ந்தனே.
5.41.6
5.41.7
- வரிப்பை யாடர வாட்டி மதகரி
உரிப்பை மூடிய வுத்தம னாருறை
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய்
இருப்பர் வானவ ரோடினி தாகவே.
5.41.7
5.41.8
- கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
பேடு மாணும் பிறரறி யாததோர்
ஆடு நாகம் அசைத்த அடிகளே.
5.41.8
5.41.9
- காரு லாமலர்க் கொன்றையந் தாரினான்
வாரு லாமுலை மங்கையோர் பங்கினன்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம்
ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே.
5.41.9
5.41.10
- தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளுமெம் மானிடம்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே.
5.41.10
5.41 — note
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர், தேவியார் - விசாலாட்சியம்மை.