Books / Thirumurai 5

48. 5.48 திருவேகம்பம் - திருக்குறுந்தொகை

5.48.1

479 . பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவ ரெனாமை நடுக்குறத்
தீமே வும்முரு வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற் படவடி யோங்களே.

5.48.1

5.48.2

  1. அருந்தி றல்அம ரர்அயன் மாலொடு
    திருந்த நின்று வழிபடத் தேவியோ
    டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
    பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே.

5.48.2

5.48.3

  1. கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன்
    மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்
    உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
    முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே.

5.48.3

5.48.4

  1. பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
    நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
    அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்
    குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.

5.48.4

5.48.5

  1. சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
    டந்தி யாய்அன லாய்ப்புனல் வானமாய்
    புந்தி யாய்ப்புகுந் துள்ளம் நிறைந்தவெம்
    எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே.

5.48.5

5.48.6

  1. சாக்கி யத்தொடு மற்றுஞ் சமண்படும்
    பாக்கி யம்மிலார் பாடு செலாதுறப்
    பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
    நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே.

5.48.6

5.48.7

  1. மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை
    ஆர்ப்ப தன்முன் னணிஅம ரர்க்கிறை
    காப்ப தாய கடிபொழில் ஏகம்பம்
    சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே.

5.48.7

5.48.8

  1. ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ்
    சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
    நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
    கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.

5.48.8

5.48.9

  1. பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
    மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
    கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
    ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே.

5.48.9

5.48.10

  1. அரக்கன் றன்வலி உன்னிக் கயிலையை
    நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்
    திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பந்
    தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே.

5.48.10