49. 5.49 திருவெண்காடு - திருக்குறுந்தொகை
5.49.1
- பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறைச் சென்னிவைத் தான்றிரு
வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே.
5.49.1
5.49.2
- கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
5.49.2
5.49.3
- ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே
வானோக் கும்வழி யாவது நின்மினோ
தானோக் குந்தன் னடியவர் நாவினில்
தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே.
5.49.3
5.49.4
- பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடந்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே.
5.49.4
5.49.5
- பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்
செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
5.49.5
5.49.6
- கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேஅடை நெஞ்சமே.
5.49.6
5.49.7
- தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்கய வர்புரம்
எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே.
5.49.7
5.49.8
- பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்
சிட்டன் ஆதிஎன் றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன் வெண்காடு அடைநெஞ்சே.
5.49.8
5.49.9
- ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற்கு அருள்செயும்
கான வேடன்றன் வெண்காடு அடைநெஞ்சே.
5.49.9
5.49.10
- பாலை யாடுவர் பன்மறை ஒதுவர்
சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
வேலை யார்விடம் உண்டவெண் காடர்க்கு
மாலை யாவது மாண்டவர் அங்கமே.
5.49.10
5.49.11
- இராவ ணம் மாமதி பற்றவை
இரவ ணம்உடை யான்றனை உள்குமின்
இராவ ணன்றனை ஊன்றி அருள்செய்த
இராவ ணந்திரு வெண்காடு அடைமினே.
5.49.11