13. பரபக்கம் — 11. மாயாவாதி மதம்
13.1
நானே பிரமம் என்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி, ஊனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்கள் உரைத்துவரும், மானா மதிகே டனுமாய மாயா வாதி பேயாகித், தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னைச் சாற்றுவாம்.
13.2
அறிவாய் அகில காரணமாய் அநந்தா நந்த மாய்அரு வாய்ச், செறிவாய் எங்கும் நித்தமாய்த் திகழந்த சத்தாய்ச் சுத்தமாய்க், குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதம் தனக்களவாய்ப், பிறியா அநுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான்.
13.3
ஒன்றாம் இரவி பலபாண்டத்(து) உண்டாம் உதகத் தங்கங்கே, நின்றாற் போல உடல்தோறும் நிகழ்ந்து நிற்கும் பொருள் மேற்கண், சென்றாற் போலப் புலன்களுக்குஞ் சிந்தை தனக்குந் தெரிவரிதாம், என்றால் காட்சி முதலாய இருமூன் றளவைக் கெட்டாதால்.
13.4
இருளில் பழுதை அரவெனவே இசைந்து நிற்கும் இருங்கதிர்கள், அருளப் பழுதை மெய்யாகி அரவும் பொய்யாம் அதுவேபோல், மருளில் சகமுஞ சத்தாகி மருவித் தோன்றும் மாசில்லாத் தெருளில் சித்தே சத்தாகும் பித்தாம் சகத்தின் செயலெல்லாம்.
13.5
உலகந் தானும் திருவசநத் துண்டாம் இன்றேல் உதியாது நிலவி யுண்டேல் அழியாது நிற்ப தாகும் மித்தையால் இலகு சுத்தி கனல்சேர இன்றாம் வௌ¢ளி நின்றதாம் குலவு சகமும் அவிகாரம் பரமார்த் தத்தில் கொள்ளாதால்.
13.6
தாங்கும் உலகுக் குபாதாநம் சத்தாம் சிலம்பி நூல்தன்பால், வாங்கி வைத்துக் காப்பதுபோல் வையமெல்லாம் தன்பக்கல், ஓங்க உதிப்பித் துளதாக்கி நிறுத்தி ஒடுக்கத் திலதாக்கும், ஆங்கு வந்த வாறதனால் சத்தாம் சகத்தின் அமைவெல்லாம்.
13.7
மன்னும் பிரமந் தனின்வானாய் வானின் வளியாய் அந்தவளி, தன்னின் அழலாய் அழலின்பால் சலமாய்ச் சலத்தில் தாரணியாய்ச், சொன்ன இதனின் மருந்தாகித் தோற்றும் மருந்தில் அன்னமாய், அன்ன மதனில் துவக்காதி ஆறு தாது ஆயினவால்.
13.8
ஆறு தாதுக் களும்கூடி வந்த கோசம் அன்னமயம் மாறில் பிராண கோசமயம் மன்னு மதனில் மனோமயந்தான் வேறு வரும்விஞ் ஞானமயம் மேவும் அதனின் அதுதன்னில் கூறி வரும்ஆ நந்தமயம் கோச மயம்பின் கூடியதால்.
13.9
கோச உருவில் பிரமந்தான் கூடித் தோன்றும் நீடுமொரு காசம் மருவும் கடற்தோறும் நின்றாற் போலக் கதிரவன்தன் வீசு கிரணம் உருவின்கண் வௌ¤ப்பட்ட டிடுவ ததிற்பற்றும் பாசம் அதனுக் கின்றாகும் என்றாற் பரத்திற் பற்றுண்டோ.
13.10
அலகில் மணிக ளவைகோவை அடைந்த பொழுதின் அங்கங்கே, நிலவும் ஒருநூல் பலநிறமாய் நின்றாற் போல நீடுருவம், பலவும் மருவு பேதத்தால் பன்மை யாகும் பிரமந்தான், குலவு போக போக்கியங்கள் கொள்ளும் போன்று கொள்ளாதால்.
13.11
போற்றும் செயலால் பலநாமம் புனைந்து போக போக்கியத்தில், தோற்றும் நனவு கனவினுடன் சுழுத்தி துரியம் எய்தும் இதற்(கு), ஏற்ற கரணம் நிரைநிரையே ஈரேழ் நாலொன் றெல்லாமும், மாற்றி நிற்கும் கேடின்றி வந்த போகம் மாய்ந்திடல்.
13.12
கருவி யெல்லாம் நானெனவே கருதல் பந்தம் அக்கருத்தை ஒருவ முத்தி யுண்டாகும் உள்ளம் வித்தாம் செய்தியினால் மருவும் மாயா காரியங்கள் அவித்தை மாய வேமாயை பிரியும் பிரிய ஞானமது பிறக்கும் பிறவா பேதமே.
13.13
ஆன கன்ம அநுட்டயங்கள் அந்தக் கரண சுத்திதரும் ஊன மின்றி அச்சுத்தி ஞான மதனை உண்டாக்கும் ஞான மதுதான் பிரமத்தை நானென் றுணர்த்தும் நான்பிறந்தால் வான மதிநீர்த் துளக்கமெனக் காணுந் தன்னை மாயையிலே.
13.14
தானே தானாய் அநுபோகம் தன்னில் தன்னை அநுபவித்திட்(டு) ஊனே உயிரே உணர்வேயென் றொன்று மின்றி உரையிறந்து வானே முதலாம் பூதங்கள் மாய மாயா தேமன்னி நானே பிரமம் எனத்தௌ¤யும் ஞானம் பிரம ஞானமே.
13.15
சாற்றும் மறைதத் துவமசிமா வாக்கி யங்கள் தமையுணர்ந்தால் போற்றி அதுநீ யானாயென் றறைவ தல்லால் பொருளின்றே தேற்று மிதனைத் தௌ¤யாதாச் தௌ¤யப் பஞ்ச ஆதநமேல் ஏற்ற இயம நியமாதி யோகம் இருநான் கியற்றுவரால்.
13.16
மாயாவாதி மத மறுதலை ஏகம் நானென இயம்பி இப்படி அறிந்து முத்தியடை மின்னென, மோக மானஉரை சோகம் இன்பொடு முடிந்தி டாதுமல டாகிய, பாக மானது கருங்க லின்தசை பறித் தழுங்கரிய குஞ்சியின், தாக மார்பசி தவிர்க்க வாயிடை கொடுத்ததென் றுரைசெய் தன்மையே.
13.17
நீடு வேதம்அள வாக ஏகமெனும் நீதி தான்நிகழ்வ தாகுமேல், நாடி ஞாதிருவும் ஞான ஞேயமுடன் நாளு நான்மறையும் ஓதலால், ஓடு மாகுமுன(து) ஏகம் ஓதுமிவை ஊன மாகிஉரை மாறுகோள், கூடு மாகும்அநு பூதி தானுமது கூடிடாதறிவி லாமையால்.
13.18
நீதியால் ஔ¤கொள் பானு வான(து)அக னீரி லேநிகழு மாறுபோல், ஆதி தானுருவ மாய காயமதன் மேவி ஆவதிலை யாகுமாம், தீதி லாஅருவ மாதலால் நிழல்கள் சேர வேறிடமி லாமையால், ஓதி ஓர்அகலின் நீரி லேயொருவர் காணலால் இலதுன் ஏகமே.
13.19
வேறு வாயில்புல னோடு மேல்மனமும் மேவி டாதுபிர மாணமு, கூறி டாதறிவு தானெ னாஉணர்தல் கோடு நீ முயலின் நாடினாய், ஈறி லாதபரம் ஏக மேயென இயம்பு நீ இசையும் ஞானமும், பேற தாவதிலை பேத மானஇது பேண வேயுளது பேசிலே.
13.20
இலகு சோதிமணி எனவும் ஏகமெனின் இதனில் ஏக மது விலகினாய், குலவு காசுமொளி அதுவும் நீடிவளர் குணமும் நாடுவதொர் குணியுமாம், பலவு மானகுண மொருவும் ஏகமது எனவும் நீபகரில் நிகரிலா, உலக மானதனை உதவு மாறதிலை உணர்வு தானுமிலை உணரிலே.
13.21
புற்றி னேர்பழுதை தொக்க போதுமயிர் புளகமாக அரவிரவிலே, உற்ற தாம்அதனை யொக்க வேஉலகு திக்கு மாறுமொரு சத்திலே, பெற்ற தாகுமெனின் அப்பி ராந்தியுடை யோரும் அப்பிரம பேதமாய், நிற்பர் நீபகரின் முற்றும் ஐயநிலை பெற்றும் இன்பமதி லாததாம்.
13.22
ஓதி யேஉலக மாதனை நீயும்நிரு வசன மாகஉரை செய்வதென், பேதை யோய்உளதும் இலதும் அல்லபொருள் பேசு வாரும்உள ரோசொலாய், ஆதி யேயுளது வருத லால்இலதி லாவ தின்மைய தணிந்துபோம், நீதி யால்உளதி லாமை நேர்வ தெனின் நேர்மை யாகியது நின்றதே.
13.23
வேற தாகியது போல்இ ருந்தமையில் வௌ¢ளி சுத்தி யெனில் ஐயமே, கூற லாம்ஒருப ரத்தொ டொத்தபொருள் கொண்டு விண்டநிலை கண்டனம், மாறி டாதுநிலம் நீர தாகி அனல் வாயு வாகிஅவை மாறியும், சேறி லாதுவிவ கார மன்றுபர மார்த்த மாயது செறிந்ததே.
13.24
மாய நூலதுசி லம்பி வாயினிடை வந்த வாறதனை மானவே, ஆய தேஉலக மான தும்பிரம மதனி லேயெனில் அடங்கிநின்(று), ஏயு மாகுமொரு சித்து மத்துடன்நி லாத தென்றுபின் இயம்பின்நீ, பேய னேகடம்மி ருத்தில் வந்தது பிறப்ப தாவதிலை பேசிலே.
13.25
வேற தாகும்உரு வத்தி லேபரம்வெ ளிப்ப டும்மென விளம்பில்நீ, ஊறி லாஉருஅ சத்தி லேபிரமம் உண்டு தானுணர்வி லாததென், மாறி வாயுவும னாதி யானவையும் வந்தி டாமையினி லின்றெனில், ஈறு தானுடைய தாய தோபிரம மென்கொ லோஇவை இறப்பதே.
13.26
பற்ற தின்றிஉடல் நின்றி டும்பரமெ னப்ப கர்ந்தனைப ரிந்துடன், உற்று டம்புநரை திரைகள் நோய்சிறை உறுப்ப ழிந்திவையு முள்ளபின், குற்ற மென்றிதனை விட்டி டாதுவிட வென்ற லும்குலைவு கொண்டிடும், பெற்றி கண்டுமொரு பற்ற றும்பரிசு பேச வேஉளது னாசையே.
13.27
சோதி மாமணிகள் ஊடு போனதொரு நூலு மானநிலை சொல்லிடும், நீதி யால்மணிகள் பேத மாகிஒரு நூலின் நின்றமைநி கழ்த்தினாய், ஆதி தானொருவ னாகி யேபல அநந்த யோனில் அமர்ந்தவன், பேதி யாதநிலை பேசினாய் உலகு பேத மேஇலத பேதமே.
13.28
ஒத்து நின்றுலின் இன்ப துன்பமவை உற்றும் உற்றிடுவ தின்றெனும், பித்த உன்னரையின் உற்ற தேயிலது பெற்ற தின்றிலது பெற்றதேல், துய்த்த லென்னுறுதல் சீவ பாவமது சொல்லி னொன்றினுந்தோய் விலாமைநீ, வைத்து நித்தமன வாக்கி றந்தபர மென்ன மானமிலை இன்னமே.
13.29
எங்கும் நின்றிடில் அவத்தை யின்றிடும் இசைந்தி டுங்கரண மென்னில்நீ, அங்கு நின்றபரம் எங்கொ ளித்ததது நின்ற தேல்அவை அடங்கிடா, இங்கு நின்றதொரு காந்த மானகல் இரும்பு சந்நிதிஇ யங்குநேர், தங்கி நின்றதெனில் நீங்கி மீளும்வகை தங்கி டாதுனுரை தப்பதே.
13.30
இருள்பொ திந்ததொரு பரிதி இவ்வுலகில் இசையில் இன்றுடலம் நானெனும், மருள்பொ திந்ததொரு பிரம மிங்குளது மருவி நின்றஉரு ஒருவியே, தெருள்பொ திந்து பரம்நானெ னும்தௌ¤வு சென்ற போதுகதி யென்றிடும், பொருள்பொ திந்ததெனில் அமல னுக்குமலம் வருத லாலுளது புன்மையே.
13.31
சுத்த மானதுப ரத்தி னுக்கணைவ தின்று சுத்தமத நாதிநீ, வைத்த மாயமுறு சித்(து) அசுத்தமுற மற்ற தற்கு மலம் வைத்தனை, ஒத்த சீவன்மல கன்ம மாயையுறு கின்ற காரணமு ணர்ந்திடாய், பித்த னேவிறகி னிற்பி றப்பதெரி யென்னில்வே றுபொருள் பெற்றதே.
13.32
உன்னின் நியும் அநுபோக மென்றபொழு துற்றி டும் துவிதம் மற்றதிங்(கு), என்னில் இல்லையெனில் இல்லை நீயுமறி வின்மை கண்டஇடம் உண்மையேல், மன்னு மோருணர்வு வந்தி டும்முணர்வெ லாமு மாயையெனில் மாயையே, சொன்ன தோர்பிரம மாயி டும்பிரமம் மாயை யாய்அறிவு சோருமே.
13.33
ஆர ணங்கள் தரு தத்து வம்அசிப தங்க ளின்பொருள் அறிந்திடாய், கார ணம்அதுவும் நீயும் என்றிருமை கண்டு வேறதின்மை கருதிடாய், நார ணன்பிரம னாலும் நாடரிய நாய கன்கழல்கள் நண்ணிநீ, ஏர ணைந்துபொலி சாத நங்கள் கொடு யோக ஞானமும் இயற்றிடே.