14. பரபக்கம் — 12. பாற்கரியன் மதம்
14.1
மன்னு மறையின் முடிவென்று மாயா வாதி உடன்மலைந்து பின்ன மாகிப் பிரமத்தைப் பேதா பேதம் சாதித்துப் பன்னு மொருநூல் அதுவாகப் பாரின் மீது பாற்கரியன் சொன்னஇதனை இந்நூலின் அகத்தே தோன்றச் சொல்லுவாம்.
14.2
சித்தே உலகாய்ப் பரிணமித்துச் சீவனாகித் திகழ்ந்த மையால், சத்தே யெல்லாம் முத்தியினைள் சாரக் கண்ட ஞானங்கள், வைத்தே மொழியும் மாமறைகள் சொன்ன மரபே வந்தக்கால், ஒத்தே கெட்டுப் பிரமத்தோ டொன்றாய்ப் போமென் றுரைத்தனனே.
14.3
பாற்கரியன் மத மறுதலை இயம்பு கின்றதுல காயி டாதுசட மின்றி நின்றுசட மாகியே, முயங்கு கின்றமையில் இலவணத்திரத முழுதுமே கனதை முயல்கைபோல், பயந்த தென்னில்அறி யப்ப டும்பொரும் அறிவு மென்றுபல வாகுமோ, தியங்கு கின்ற தெனு ரைத்தி டாய்கடின மாதி யாகிவரு சித்தனே.
14.4
உன்னு கின்றபிர மத்தி லேசிறிதிவ் வுலக மானதென ஓதின்நீ, மன்னு கின்றசில கால மோடழியும் அழிய வந்துதவு மாயையால், தன்னி லொன்றுமெனில் வருத லோடிறுதி தருத லால்அதுச டத்ததாம், உன்னொ டச்சகமும் உண்மை யன்றுசட மென்ன வேஉறுதி மன்னுமே.
14.5
வித்தெ ழுந்துமர மாய்வி ளைந்தமை விளம்பி னாய் உவமை வேறுநீ, நித்த மென்றவுரை பொய்த்து நீடுசட மாய்எ ழுந்தழியும் நின்பரம், ஒத்தெ ழும்பொழுது வித்தி னுக்கவனி யுண்டு தாரகமு னக்கெனா, பித்த னென்றுல குரைத்தி டும்பிரம மாயி னாய்இவைபி தற்றிலே.
14.6
சூன கம்கடகம் மோதிரம் சவடி தொடரொ டாரம்மடி தோடுநாண், ஆட கந்தருவ தாகும் அப்படிய னைத்து மப்பிசம மாகுமேல், நீடும் அப்பணிகள் சௌ¢து ளோர்அவைபு னைந்து ளோர்களை நிகழ்த்திடும், நாடி டும்சகமி யற்று வோர் கொடு நடத்து வோர்உளர்ந விற்றிலே.
14.7
அறிவி னோடுசெயல் மாறில் வீடதனை அணுகொ ணாதவைஇ ரண்டினால், உறுதி யானபிர மத்தி னோடழிய ஒன்ற லாமென உரைத்திகாண், இறுதி யேல்அதனொ டிசைவ தின்றிசைவ துள்ள தாயிடின்அவ் வின்பமே, பெறுதி நீஉடலொ டுயிர்க ளாய்அறிவு பிரியு மாறுசெயல் பெறுவதென்.