Books / Thirumurai 6

67. 6.75 திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம்௿

6.75.1

சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்௿
சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்௿
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்௿
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்௿
மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்௿
மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்௿
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.1

6.75.2

கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன்௿
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்௿
ஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்௿
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்௿
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்௿
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்௿
கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.2

6.75.3

நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்௿
நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை௿
ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்௿
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்௿
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்௿
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்௿
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.3

6.75.4

தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்௿
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்௿
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி௿
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்௿
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி௿
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்௿
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.4

6.75.5

காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்௿
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்௿
ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்௿
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்௿
நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன்௿
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்௿
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.5

6.75.6

முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்௿
முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்௿
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி௿
அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்௿
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு௿
சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்௿
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.6

6.75.7

காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்௿
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்௿
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்௿
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்௿
பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்௿
பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்௿
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.7

6.75.8

பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்௿
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு௿
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்௿
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல௿
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து௿
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்௿
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.8

6.75.9

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்௿
பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்௿
சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்௿
சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்௿
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை௿
அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே௿
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.9

6.75.10

ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை௿
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே௿
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்௿
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்௿
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை௿
சரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்௿
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.10

6.75.11

செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்௿
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்௿
நெறிகொண்ட குழலியுமை பாக மாக௿
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்௿
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்௿
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்௿
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங்௿
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.

6.75.11

6.75 — note

௿ இத்தலம் சோழநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - மடந்தைபாகேசுவரர்,௿ தேவியார் - பெரியநாயகியம்மை.௿ ௿