Books / Thirumurai 6

70. 6.78 திருவாலங்காடு - திருத்தாண்டகம்௿

6.78.1

ஒன்றா வுலகனைத்து மானார் தாமே௿
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே௿
நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே௿
நீர்வளிதீ யாகாச மானார் தாமே௿
கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே௿
கோலப் பழனை யுடையார் தாமே௿
சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.1

6.78.2

மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே௿
வானோர் வணங்கப் படுவார் தாமே௿
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே௿
சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே௿
பலபலவும் வேடங்க ளானார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.2

6.78.3

ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே௿
அளவில் பெருமை யுடையார் தாமே௿
பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே௿
புனிதப் பொருளாகி நின்றார் தாமே௿
பாவுற்ற பாட லுகப்பார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
தேவுற் றடிபரவ நின்றார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.3

6.78.4

நாறுபூங் கொன்றை முடியார் தாமே௿
நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே௿
மாறிலா மேனி யுடையார் தாமே௿
மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே௿
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
தேறினார் சித்தத் திருந்தார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.4

6.78.5

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே௿
அந்தியுஞ் சந்தியு மானார் தாமே௿
சொல்லும் பொருளெலா மானார் தாமே௿
தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே௿
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.5

6.78.6

தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே௿
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே௿
தண்டா மரையானும் மாலுந் தேடத்௿
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே௿
பண்டா னிசைபாட நின்றார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
திண்டோ ள்க ளெட்டு முடையார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.6

6.78.7

மையாருங் கண்ட மிடற்றார் தாமே௿
மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே௿
ஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும்௿
அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே௿
பையா டரவ மசைத்தார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
செய்யாள் வழிபட நின்றார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.7

6.78.8

விண்முழுதும் மண்முழுது மானார் தாமே௿
மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே௿
கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமே௿
காலங்க ளூழி கடந்தார் தாமே௿
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
திண்மழுவா ளேந்து கரத்தார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.8

6.78.9

காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே௿
கயிலை மலையை யுடையார் தாமே௿
ஊரா வேகம்பம் உகந்தார் தாமே௿
ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே௿
பாரார் புகழப் படுவார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.9

6.78.10

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே௿
வண்கயிலை மாமலையை வந்தி யாத௿
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை௿
நெரிய விரலா லடர்த்தார் தாமே௿
பாலொத்த மேனி நிறத்தார் தாமே௿
பழனை பதியா வுடையார் தாமே௿
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே௿
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

6.78.10

6.78 — note

௿ இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.௿ சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,௿ தேவியார் - வண்டார்குழலியம்மை.௿ ௿