84. 6.92 திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம்
6.92.1
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான் றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.92.1
6.92.2
பல்லாடு தலைசடைமே லுடையான் றன்னைப்
பாய்புலித்தோ லுடையானைப் பகவன் றன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் றன்னைச்
சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் றன்னை
ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
6.92.2
6.92 — note
இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின. இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வேதகிரீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.