Books / Thirumurai 6

87. 6.95 தனி - திருத்தாண்டகம்௿

6.95.1

௿

6.95.1

6.95.1

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ௿
அன்புடைய மாமனும் மாமி யும்நீ௿
ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ௿
ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ௿
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ௿
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ௿
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ௿
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

6.95.1

6.95.2

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்௿
வெய்ய வினைப்பகையும் பைய நையும்௿
எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்௿
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்௿
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி௿
அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த௿
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்௿
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

6.95.2

6.95.3

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே௿
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே௿
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே௿
உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே௿
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே௿
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே௿
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே௿
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

6.95.3

6.95.4

நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி௿
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற௿
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற௿
சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை௿
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்௿
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற௿
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்௿
கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.

6.95.4

6.95.5

திருக்கோயி லில்லாத திருவி லூருந்௿
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்௿
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்௿
பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்௿
விருப்போடு வெண்சங்க மூதா வூரும்௿
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்௿
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்௿
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.

6.95.5

6.95.6

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்௿
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்௿
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்௿
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்௿
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்௿
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்௿
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்௿
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

6.95.6

6.95.7

நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்௿
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்௿
மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்௿
மறைநான்கு மானாயா றங்க மானாய்௿
பொன்னானாய் மணியானாய் போக மானாய்௿
பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை௿
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்௿
ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.

6.95.7

6.95.8

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்௿
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்௿
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்௿
எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்௿
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்௿
பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே௿
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ௿
எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.

6.95.8

6.95.9

குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்௿
குற்றமே பெரிதுடையேன் கோல மாய௿
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்௿
நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற௿
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்௿
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்௿
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்௿
என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.

6.95.9

6.95.10

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து௿
தரணியொடு வானாளத் தருவ ரேனும்௿
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்௿
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்௿
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்௿
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்௿
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்௿
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.

6.95.10

6.95 — note

௿